News

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கையை சுட்டுக்கொன்ற போலீசார்

 

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட திருநங்கையை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லேயில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது பள்ளிக்கூடத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண் ஒருவர் மாணவர்கள் மற்றும் ஊழியர்களை சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும் இந்த கொடூர சம்பவத்தில் 9 வயதுக்குட்பட்ட 3 மாணவர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். இதனிடையே துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை சுட்டுக்கொன்றனர். அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் துப்பாக்கி சூட்டை நடத்திய 28 வயதான ஆட்ரிஹேல் என்பதும், அவர் திருநங்கை என்பதும் தெரியவந்தது.

ஆட்ரிஹேலின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சதி திட்டம் குறித்த குறிப்புகள், பள்ளியின் வரைபடம் மற்றும் துப்பாக்கிகள் கிடைத்தன. அவர் பள்ளியில் மட்டுமல்லாமல் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அதிரவைத்துள்ள நிலையில் இது குறித்து அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், “தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கி வன்முறைகள் தேசத்தின் ஆன்மாவை கிழிக்கிறது. எனவே அமெரிக்க நாடாளுமன்றம் விரைவில் துப்பாக்கி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top