ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, ஜனாதிபதி ஆனவர் டிரம்ப்.
முன்னதாக தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். அந்த வகையில் ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்புக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.
இது பிரசாரத்தில் டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் தனது வக்கீல் மைக்கேல் கோச்சன் என்பவர் மூலம் நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு 1,30,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 கோடி) வழங்கி சமரசம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்தல் நிதியில் இருந்து பணம் இப்படி அளிக்கப்படும் பணத்தை ‘ஹஷ் மணி’ என குறிப்பிடுகின்றனர். இதுபோன்று பணம் வழங்கப்படுவது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. ஆனால் டிரம்ப் அந்த பணத்தை தனது தேர்தல் நிதியில் இருந்து வழங்கியதுதான் அவருக்கு வினையானது. அதாவது, டிரம்பின் தேர்தல் வரவு, செலவு கணக்கில் ஸ்டார்மி டேனியல்சுக்கு வழங்கிய தொகை சட்டரீதியிலான செலவு என்று பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவில் பொய்யான வணிக செலவை காட்டுவது சட்டவிரோதம் ஆகும். எனினும் டிரம்ப் இதை திட்டவட்டமாக மறுத்த நிலையில், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டு இது குறித்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக டிரம்பின் முன்னாள் வக்கீல் மைக்கேல் கோச்சன் அவருக்கு எதிராக சாட்சியளித்ததால் வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அதைத் தொடர்ந்து, மன்ஹாட்டன் கோர்ட்டு கடந்த வாரம் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக மன்ஹாட்டன் கோர்ட்டில் நேற்று முன்தினம் டிரம்ப் நேரில் ஆஜரானார். அதை தொடர்ந்து, அமெரிக்க சட்டவிதிகளின்படி அவர் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் வகித்த உயர் பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு கைவிலங்கு பூட்டப்படவில்லை. அவரது கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தார் விசாரணையின்போது மந்தமாக காணப்பட்ட டிரம்ப், நீதிபதியின் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்தார். தன்மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, “நான் குற்றம் செய்யவில்லை” என கூறி அவற்றை மறுத்தார். தொடர்ந்து, டிரம்பை ஜாமீனில் விடுவிப்பதாக அறிவித்த நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் நடைபெறும் என கூறினார்.
அதனையடுத்து கோர்ட்டில் இருந்து அமைதியாக வெளியேறிய டிரம்ப், உடனடியாக விமானம் மூலம் புளோரிடாவுக்கு சென்றார்.அங்குள்ள தனது கடற்கரை வீட்டில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடு நரகத்தை நோக்கி செல்கிறது என் மீதான இந்த குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே அவமானம். அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. ஒரு போதும் நினைத்தது இல்லை.
நான் செய்த ஒரே தவறு என்னவென்றால், அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து, பயமின்றி நாட்டை காத்தது தான். அமெரிக்க வரலாற்றில், இருள் சூழ்ந்த பக்கத்தில் இருக்கிறோம்.
நாடு நரகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த உலகம் ஏற்கனவே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற்றது. எல்லைகளைத் திறந்துவிட்டது என நிறைய முடிவுகளை நம்மை நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.