இராணுவ கணிஷ்ட அதிகாரியை கொலை செய்த இராணுவ கோப்ரலுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு, வல்லிப்புனம்,புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ கணிஷ்ட அதிகாரியை அதே இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ கோப்ரல் விடுமுறை கோரி விண்ணப்பம் செய்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீர் சண்டையாக மாறி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ கணிஷ்ட அதிகாரி கொல்லப்பட்டுள்ளார்.
5 இராணுவ உத்தியோகத்தர்கள், வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியாக சாட்சியமளித்து எதிரியான இராணுவ கோப்ரல் துப்பாக்கி பிரயோகம் செய்தமை சம்பவத்தின் பின்னரான விசாரணைகளில் தெரியவந்ததாக சக இராணுவத்தினர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இதன்போது எதிரி தனது சாட்சியத்தில் இராணுவ கணிஷ்ட அதிகாரி விடுமுறை கோரியமையினால் ஏற்பட்ட முரண்பாடே கொலை செய்யப்பட காரணம் என தனது சாட்சியத்தை பதிவு செய்துள்ளார்.
எதிரியை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலை செய்யவில்லை. திடீர் சண்டை, கோபம் காரணமாகவே இந்த குற்றச்செயல் இடம்பெற்றதாக தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், [கைமோச] கொலை குற்றச்சாட்டுக்கு எதிரியான இராணுவ கோப்ரல் அதிகாரியை குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 10000 ரூபா தண்டப்பணம் கட்ட தவறும் பட்சத்தில் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.