இஸ்ரேல் நாட்டின் மீது சிரியாவில் இருந்து 6 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடந்த நிலையில், ஜெருசலேமில் 2 ஆயிரம் போலீசாரை குவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வடகிழக்கு எல்லையில் அமைந்த சிரியாவில் இருந்து அடுத்தடுத்து ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன
. இதில், முதல் ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் தடுத்து அழித்துள்ளது. எனினும், 2-வது ஏவுகணையானது, திறந்த வெளியில் விழுந்து உள்ளது.
சிரியாவை ஒட்டிய ஜோர்டான் நாட்டு எல்லை பகுதியிலும் ஒரு ஏவுகணை விழுந்து உள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சிரிய அரசுக்கு நெருங்கிய பாலஸ்தீனிய குழு ஒன்று, 3 ஏவுகணைகள் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று உள்ளது.
ஜெருசலேமில் பதற்றம் நிறைந்த பகுதியில் அமைந்த அல்-அக்சா மசூதியில் நூற்றுக்கணக்கான போலீசாரின் அதிரடி ரெய்டுக்கு பதிலடி கொடுக்கவே இந்த ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்து உள்ளது.
பாலஸ்தீனியர்கள் விரதம் மேற்கொள்ளும் ரமலான் மாதத்தில் நடந்த போலீசாரின் இந்த ரெய்டை தொடர்ந்து, லெபனான் மற்றும் பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் தாக்குதலை நடத்த தூண்டியுள்ளது என கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஜெருசலேமில் இன்று 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரமலானில் இஸ்லாமியர்கள் திரளாக அல்-அக்சா மசூதிக்கு குவிந்து வரும் சூழலில் அதனை ஒட்டிய வெஸ்டர்ன் வால் பகுதியில் ஆயிரக்கணக்கான யூதர்களும் இன்று சிறப்பு இறைவழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், மசூதிக்குள் யூதர்கள் நுழைய போகிறார்கள் என்ற பொய்யான தகவலும் பரவியுள்ளது. இதுபற்றி ஜெருசலேம் காவல் அதிகாரி தோரன் டர்ஜ்மேன் கூறும்போது, வழிபாட்டிற்கான சுதந்திரம் அனுமதிக்கப்படும். முஸ்லிம்கள் இறைவணக்கம் செலுத்த வருவதற்கான அனுமதியை நாங்கள் வழங்குவோம். அனைத்து மதநம்பிக்கைக்காரர்களும் பாதுகாப்புடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதனை நாங்கள் உறுதி செய்வோம் என கூறியுள்ளார்.
இஸ்ரேலில் முதலில் 3 ஏவுகணை தாக்குதல்களும், பின்னர் 3 ஏவுகணை தாக்குதல்கள் என இஸ்ரேல் நாட்டின் மீது மொத்தம் 6 ஏவுகணை தாக்குதல்கள் வீசப்பட்டு உள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.