ஈழத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை சர்வதேசத்திற்கு முன் கொண்டு செல்லும் வகையில் புதிய முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘சர்வஜன வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்‘‘ என்ற பெயரில் இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கனடாவுக்கான இணைப்பாளராக கலாநிதி குமுதினி குணரட்ணம் செயற்படுகிறார்.
அமெரிக்காவில் தளம் அமைந்துள்ள ஆறு தமிழ் அமைப்புக்கள் வாக்கெடுப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்திருக்கிறார்.
இதன்படி, ஈழத் தமிழர் பிரச்சினை வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்துவதாக ருத்ரகுமாரன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர் தாயகத்திற்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அத்துடன் ஈழத்; தமிழர் பிரச்சினை தீர்வுக்கான வாக்கெடுப்பு சர்வதேசத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதி கனடாவிலும் பிரித்தானியாவிலும் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, இந்த வாக்கெடுப்பு இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என சர்வஜன வாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.