News

உக்ரைனை தாக்க முயன்றபோது சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்

 உக்ரைனை தாக்க முயன்றபோது தவறுதலாக சொந்த நகரத்தின் மீதே ரஷிய விமானங்கள் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷியா-உக்ரைன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. ஒரு வருடம் கடந்தும் இன்னும் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல் ரஷியாவுக்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளன. ஆனால் சமீப காலமாக இந்த போரை நிறுத்தும்படி இரு நாடுகளையும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும் இந்த போர் முடிவுக்கு வந்தபாடில்லை. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதாவது இரு நாடுகளும் வான்வழி தாக்குதலிலும் ஈடுபடுகின்றன. அதன்படி நேற்று முன்தினம் உக்ரைன் பகுதிகளை குறிவைத்து ரஷியா தனது சுகோய்-34 என்ற போர் விமானம் மூலம் குண்டுகளை வீச முயற்சித்தது. ஆனால் தவறுதலாக உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷியாவுக்கு சொந்தமான பெல்கோரோட் என்ற நகரம் மீது அந்த குண்டுகள் விழுந்தன. இதில் அந்த நகரத்தின் பல வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன. இதனால் அங்கிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனால் அந்த நகரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் தவறுதலாக மேற்கொள்ளப்பட்டதை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புகொண்டுள்ளது. எனினும் இது குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து கூறுகையில், `தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளப்படும்’ என அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த சம்பவம் ரஷிய ராணுவத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top