உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று.
இந்நிலையில் அங்கு நடந்த சம்பவம் ஒன்று உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிழக்கு கென்யாவில் உள்ள ஒரு காட்டில் உள்ள புதைகுழிகளில் இருந்து 73 பேரின் சடலங்கள் இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு மத வழிபாட்டு முறையுடன் தொடர்புடைய மக்களை ‘‘சொர்க்கத்திற்கு செல்வோம்‘‘ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை உண்ணாவிரதம் இருக்க வைத்ததில் உயிரிழந்த 73பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கென்யாவின் ஷகாஹோலா காட்டில் ஒரு வாரத்திற்கு முன்னர் சில கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கென்ய துணை இராணுவம் பொலிஸாரின் உதவியுடன் அந்த பகுதி முழுவதும் தோண்டி பார்த்ததில் சுமார் 15 சடலங்கள் கிடைத்துள்ளன.
இந்த காட்டில் பழங்குடியினர் யாரும் கிடையாது. இப்படி இருக்கையில் இங்கு எப்படி 15 உடல்கள் வந்தது என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
அதாவது இந்த பகுதியில் இருக்கும் மத தலம் ஒன்றில் உள்ள மத தலைவர் அங்கு வரும் மக்களுக்கு ‘‘சொர்க்கத்திற்கு செல்வோம்‘‘ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி சில சடங்குகள் நடத்தி இறுதியாக உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரது பேச்சை கேட்ட மக்கள் ஷகாஹோலா காட்டில் உண்ணா நோன்பு இருக்க அவர்களே இறுதியில் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்ய செஞ்சிலுவைச் சங்கம் 112 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்நிலையில், தோண்ட தோண்ட மேலும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த விவகாரம் தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.