கென்யாவில் பட்டினி வழிபாட்டில் உயிரிழந்த குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்களை மோசமான வழிபாட்டு முறைக்கு தள்ளிய போதகர் பால் மெக்கென்சி என்தெங்கே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவின் மலிண்டிக்கு வெளியே உள்ள ஷகாஹோலா காட்டில் இயேசுவைச் சந்திக்கும் சாக்குப்போக்கின் கீழ் மத போதகரால் மூளைச் சலவை செய்யப்பட்ட மக்கள், தீவிர பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பான ரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைத்த நிலையில், காட்டுப் பகுதிக்குள் சோதனையிட்ட பொலிஸார், பட்டினி வழிபாட்டில் ஈடுபட்டு உயிரிழந்த 21 நபர்களின் உடல்களை சனிக்கிழமை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் 26 நபர்களின் உடல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் கென்யாவில் மோசமான பட்டினி வழிபாடு காரணமாக உயிரிழந்த நபர்களின் உடல்கள் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது, இதில் இரண்டு குழந்தைகளின் அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பட்டினி கிடப்பதன் மூலம் இயேசுவை சந்திக்கலாம் என்று சீடர்களை மூளை சலவை செய்த வழிபாட்டுத் தலைவரான பால் மெக்கென்சி என்தெங்கே கைது செய்யப்பட்டார்.
போதகர் மக்கென்சி என்தெங்கே கடந்த மாதம் முன் 2 குழந்தைகளின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே அனுப்பட்டு இருக்கிறார். ஆனால் தற்போது உடல்கள் மேலும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போதகர் மக்கென்சி என்தெங்கே தற்போது சிறையில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
ரகசிய வழிபாடு மற்றும் இறந்தவர்களின் கல்லறைகளை அடையாளம் காண முன்னாள் தேவாலய உறுப்பினர் டைட்டஸ் கட்டனா உதவினார்.
இது தொடர்பாக அவர் பேசிய போது, நாங்கள் கல்லறைகளை காவல்துறையினரிடம் காட்டியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தரப்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தேவாலயத்தின் பதினோரு சீடர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், மூவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டனர் என தெரியவந்துள்ளது.