News

கென்யா: பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 213 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது.

இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, பாதிரியார் பால் மெக்கன்சி தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து பாதிரியார் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் தனது பண்ணையில் மொத்தமாக புதைத்துள்ளார் என்பது தெரிய வந்தது. 90 பேர் பிணமாக மீட்பு அதனையடுத்து, போலீசார் அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டதோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை மந்திரி கிதுரே கிண்டிகி, “800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், போலீசாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை போலீசார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மாலிண்டி நகரில் 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top