மேலும், தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எதிர் வரும் நாட்களில் பகிரங்கப்படுத்துவேன் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப். ) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இனப்பிரச்சினை, அரசியலமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராக மீண்டும் அழிப்பை தொடர்வதற்காகவா நாணய நிதியம் நிதி வழங்கியுள்ளது என்பதை இந்த உயர்ந்த சபை ஊடாக கேட்கின்றோம்.
நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான செயற்பாடுகள் நாளாந்தம் தீவிரமடைந்து வரும் நிலையில் சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன. இனவாதம் நாட்டின் பிரதான கருபொருளாக உள்ளது. இனவாத சிந்தனை ஆளும் தரப்பு அரசியல் வாதிகள் உள்ளங்களில் ஊறிப்போயுள்ளன.
இவ்வாறான நிலையில் தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது. இதற்கு சர்வதேச நாணய நிதி யம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என்று நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடம் கேட்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டு, பொருளாதார மீட்சியடைந்த பின்னர் தமிழ் இனத்துக்கு எதிரான செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கும் முனைப்புக்களே அரசிடம் காணப்படுகின்றன.
நாட்டில் இனவாத பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில் லை.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு ஊடாக தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலைமையே உள்ளது. பொருளாதார நெருக்கடி தீவிரமடைய அரசியல் பிரச்சினையே காரணம்.
பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் பிரச்சினையை மூடி மறைக்க முடியாது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாதுகாப்பு தரப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் சபைக்கு இரண்டு பிரதிநிதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சாதக, பாதக விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தால் முரண்பாடற்ற ஒரு மித்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியும்.
ஆனால் விவாதத்தின் போது தான் நாணய நிதியத்துடனான நிபந்தனைகள் விடயங்கள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. எனவே இது ஒரு ஏமாற்று வேலை என்றார்.