ஜேர்மன் தலைநகரான பெர்லினில் இருவர் பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொள்ளப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலை 5.30 மணியளவில், பெர்லினில் ஒரு பெரிய பொலிஸ் ஆபரேஷன் நடைபெறுவதாகக் கூறி Keithstrasse என்ற தெருவில் அமைந்துள்ள புராதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் முன் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
சிறிது நேரத்தில், அந்தக் கடைக்குள்ளிருந்து சிறிய அளவிலான காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப்பின் ஆயுதங்களுடன் இருந்த ஒரு ஆண் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அந்த கடைக்குள் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் ஒரு ஆணை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில், பொலிசார் அதிரடியாக அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்தனர். பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அந்த ஆண் எந்த காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
ஆனால், அவரை ஆயுதங்களுடன் பிணைக்கைதியாக வைத்திருந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்த விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.