அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, பிரித்தானிய நேரப்படி மதியத்திற்கு மேல் 7.15 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது 30 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சமீப காலங்களில் நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்ட ஒருவர் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
வியாழன் அன்று வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகைகளில், தொழில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட வழக்குகள் எதுவென இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.
அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை என கூறப்பட்டாலும், டிரம்ப் தனது ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகளை மேற்கொள்வதில் எந்த விலக்கும் இல்லை என்றே கூறப்படுகிறது.
டிரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ள மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு என்பது, ஆபாசப்பட நடிகை ஒருவருடனான உறவை மூடிமறைக்க, குறித்த நடிகைக்கு டொனால்டு டிரம்ப் பெருந்தொகையை அளித்தார் என்பதேயாகும்.
2016 ல் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்கும் சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப்பட நடிகைக்கு பெருந்தொகையை வழங்கியுள்ளார். 2006ல் நடந்த அந்த விவகாரம் தொடர்பில், டிரம்புக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இருக்கவே சட்டத்தரணி மூலமாக பணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய சட்டத்தரணியும் 3 ஆண்டுகள் வரையில் தண்டனையை அனுபவித்தார். தற்போது டிரம்ப் விவகாரத்தில், அவர் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்கொண்ட பின்னர், கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை டிரம்ப் வருவதற்கு முன்பு நீதிமன்ற வளாகம் மூடப்படும். அதன் பின்னர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் நீதிமன்ற வளாகம் இருக்கும்.