News

பர்கினாபசோவில் ராணுவ உடையில் வந்து 60 பேரை சுட்டு கொன்ற மர்ம கும்பல்

 பர்கினாபசோவில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் ராணுவ உடையில் வந்து 60 பேரை சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது.

பர்கினாபசோ நாட்டில் யதேங்கா மாகாணத்தில் கர்மா கிராமத்தில் மாலி நாட்டையொட்டிய எல்லை பகுதியில் பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.

அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய குழுக்கள் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், பர்கினாபசோ ராணுவ உடை அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று கர்மா கிராமத்தில் புகுந்து திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியுள்ளது.

இதில், கிராமவாசிகளில் 60 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை அந்த ஊரை சேர்ந்த வழக்கறிஞரான லாமினே கபோர் தெரிவித்து உள்ளார். போலீசார் அளித்த தகவல் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியானது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த தாக்குதல் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளிவரவில்லை.

பயங்கரவாத ஒழிப்புக்கான எண்ணற்ற அதிரடி வேட்டைகளை மாகாண பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு வீரர்கள் நடத்தியபோதும், குடிமக்களின் மீது ஆயுதமேந்திய கும்பலின் தாக்குதல் கடந்த ஆண்டில் இருந்து அதிகரித்து வருகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடந்த மார்ச்சில் தெரிவித்தது. கடந்த 15-ந்தேதி அதே பகுதியில் உவாஹிகவுயா என்ற இடத்தில் ராணுவம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மக்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top