News

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம்!

பொருளாதார மேம்பாட்டுக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையான போராட்டங்களுக்கு இடமளிக்க முடியாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பேருவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த கடுமையான தீர்மானங்களின் பயனை நாட்டு மக்கள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார முன்னேற்றத்தின் பயனை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மாத்திரம் வலியுறுத்துகின்றன.

நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை மாறாக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை கோருகிறார்கள்.

பொருளாதாரம் ஸ்தீரமடைந்த பின்னர் எந்த தேர்தலையும் நடத்தலாம், எவரும் போட்டியிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக போராட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஜனநாயகம் என்ற ரீதியில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் உண்மையில் ஜனநாயக போராட்டமா? என்பதை மக்கள் ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களாணையுடன் ஆட்சிக்கு வர முடியாத தரப்பினர் போராட்டங்கள் ஊடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள்.

அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top