ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு மர்மப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, அதாவது திங்கட்கிழமை மாலை, மாஸ்கோவிலுள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்துக்குள் மர்மப்பொருள் ஒன்று இருந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல, மாஸ்கோவிலுள்ள பின்லாந்து நாட்டின் தூதரகத்துக்கும் மூன்று மர்மக் கடிதங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றிற்குள்ளும் இதேபோல ஒரு மர்ம பவுடர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி மர்மப்பொருட்கள் அடங்கிய கடிதங்களுக்குப் பின்னால் பல பதறவைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.
அமெரிக்காவில், இரட்டைக்கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஆந்தராக்ஸ் என்னும் நச்சுக்கிருமி பொடியாக்கப்பட்டு, அந்த பொடி தடவப்பட்ட கடிதங்கள் அமெரிக்காவில் பலருக்கு அனுப்பப்பட்டவிடயம் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த கடிதங்களால் ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். 17 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டார்கள். மேலும் சில நாடுகளில், இதுபோல் போலியாக ஆந்தராக்ஸ் பவுடர் பெயரில் கடிதங்கள் அனுப்பி அச்சுறுத்தும் சம்பவங்களும் நடைபெற்றன.
ஆகவேதான், இதுபோல் மர்மப்பொருட்கள் அடங்கிய கடிதங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போது பிரெஞ்சு தூதரகத்துக்கு அனுப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.