News

வடக்கு கிழக்கை முழுமையாக முடக்குவோம் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார் இரா.சாணக்கியன் !!

தொல்பொருள் திணைக்களத்தினை கொண்டு அரசாங்கம் முன்னெடுத்துவரும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு கிழக்கை முடக்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மற்றும் திருகோணமலையில் தொல்பொருட்களை பாதுக்கப்பதாக கூறி அரசாங்கம் ஏற்படுத்தும் குழப்பங்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புக்களிடம் இருந்து எத்தகைய நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றாலும் இனவாதத்தை தூண்டும் அரசாங்கம் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொல்பொருட்களை பாதுகாப்பது கடமை என்றாலும் தொல்பொருளை பாதுகாக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு மேலதிகமாக பௌத்த குருமார்களின் பிரசன்னம் ஏன் இருக்கின்றது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பினார்.

பசி பட்டினியால் பலரும் வாடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்கு என பலகோடி ரூபாய் செலவு செய்யப்படுவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடுமையாக சாடியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top