வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது.
வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.
இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் தற்போது வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. இதன் மூலம் செயற்கையாக கடலில் சுனாமியை ஏற்படுத்தி எதிரிகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் டிரோன் மூலம் அணு ஆயுத சோதனையை இன்று மீண்டும் வடகொரியா நடத்தி உள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது
ஹயில்-2 என்ற பெயரிலான இந்த அணு ஆயுத சோதனை கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கிழக்கு துறைமுக நகரான டன்கான் பகுதியில் இந்த சோதனை நடத்தப் பட்டது. இந்த வாரத்தில் நடந்த 2-வது சோதனை இதுவாகும். இப்படி தொடர்ந்து வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 
											 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													