உக்ரைனுக்கு 1,550 கவச வாகனங்கள் மற்றும் 230 இராணுவ டாங்கிகளை நோட்டோ நட்பு நாடுகள் கொடுத்து இருப்பதாக நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிட நோட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது உக்ரைனுக்கு நோட்டோ நாடுகள் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இணைந்து 1550 கவச வாகனங்கள் மற்றும் 230 டாங்கிகளை வழங்கியுள்ளனர்.
இந்த உதவி ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து நிலப்பகுதியை மீட்டெடுக்க உக்ரைனுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நோட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 9க்கும் மேற்பட்ட உக்ரைனிய கவசப் படைகளுக்கு நோட்டோ பயிற்சி வழங்கி இருப்பதாகவும், அவர்கள் விரைவில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்த இடங்களை மீட்டெடுக்க வலுவான நிலையில் போரின் முன்வரிசையில் களமிறங்குவார்கள் என்றும் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ரஷ்யாவையும் குறைத்து மதிப்பிட கூடாது, ரஷ்யா தரைப்படை வீரர்களை ஒன்றிணைத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை முன்வரிசைக்கு அனுப்ப தயாராகி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கான நோட்டோ படைகளின் இந்த உதவிக்கு மத்தியில் போலந்து மற்றும் செக் குடியரசு சோவியத் MiG-29 விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன.