பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு – மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வருடங்களின் பின்னர் காணி உரிமையாளர்கள் சிலர் கடுமையான பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணற்கேணிப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.
இந் நிலையில் இவ்வாறு மணற்கேணிப் பகுதியில் காணியுள்ள, காணி உரிமையாளர்கள் ஐவர் 06.04.2023 முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு சென்று, தமது காணிகளைத் துப்பரவுசெய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியிருந்தனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த குறித்த காணி உரிமையாளர்கள்,
மணற்கேணியில் காணி உள்ள ஏனைய காணி உரிமையாளர்களைத் தாம் தேடிவருவதாகவும், அவர்களும் தம்மோடு கைகோர்த்து தமது எல்லைக்கிராமத்தை மீட்டெடுக்க முன்வரவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணலாறு – மணற்கேணிப் பகுதியில் இன்னும் பல தமிழ் மக்களுக்கு காணிகள் உள்ளன. இந்த மணற்கேணி மத்திய வகுப்பு காணித் திட்டத்தில் காணிகள் பெற்றுக்கொண்ட காணி உரிமையாளர்கள் பலர் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக மத்திய வகுப்பு காணிகள் என்ற அடிப்படையில் 1000 ஏக்கர் திட்டத்தில் இந்தக் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவிற்கு வருகைதந்து அரச உத்தியோகங்களில் ஈடுபட்டவர்களுக்கே பெரும்பாலும் இந்தக் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு மணற்கேணிப் பகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டவர்கள் பெரும்பாலானர்கள் தற்போதும் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, அச்சுவேலி, கொழும்பு என பல இடங்களிலும் வசிக்கின்றனர்.
எனினும் அவர்களை இனங்கண்டு தொடர்புகளை ஏற்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. இவ்வாறு காணி உள்ளவர்களில் ஐவர் மாத்திரமே எமது காணிகளுக்கு உரிமை கோரி வந்திருக்கின்றோம்.
எனவே மணற்கேணியில் காணிகள் உள்ளவர்கள் எம்மோடு இணைந்துகொள்ளுங்கள், நாம் அனைவரும் இணைந்து எமது எல்லைக்கிராமத்தினை மீட்டெடுக்கவேண்டும்.
குறிப்பாக இந்த மணற்கேணிப்பகுதியில் காணிகளைப் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானவர்கள் தற்போது இறந்திருக்கலாம்.
எனினும் அவர்களுடைய, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் தற்போது இருப்பார்கள். அவ்வாறு காணி உரிமையாளர்கள் இருப்பின், அவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளமுடியும்.
779229098 என்னும் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு இந்த மணற்கேணி காணி தொடர்பிலே பேசமுடியும்.
40 வருடகாலத்திற்குப் பின்னர் நாம் எமது வளமான எல்லைக் கிராமத்தினை மீட்டெடுப்போம். அதற்காக நாம் அனைவரும் ஒன்று சேருவோம் என்றனர்.