News

56 நாட்களுக்கு பின்… துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய ‘அதிசய குழந்தை’ தாயுடன் சேர்ந்தது

 

துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் 128 மணி நேரம் சிக்கி, மீட்கப்பட்ட அதிசய குழந்தை 56 நாட்களுக்கு பின் தாயுடன் சேர்ந்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது காசியான்டெப் அருகே 17.9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. தொடர்ந்து துருக்கியில், மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என கூறப்படுகிறது. இதில் சிக்கி இரு நாடுகளிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்

இந்த நிலநடுக்கத்தில் சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிக்கி பாதிப்படைந்தனர். அவர்களில் பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தை ஒன்றும் தப்பி பிழைத்தது. நிலநடுக்க இடிபாடுகளில் 128 மணிநேரம் சிக்கி இருந்த அந்த குழந்தையை மீட்பு படையினர் மீட்டனர். எனினும், இந்த குழந்தையின் தாயாரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஒருவேளை நிலநடுக்க பாதிப்பில் அவர் உயிரிழந்து இருக்க கூடும் என நம்பப்பட்டது.

வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் குழந்தையின் தாயார் கண்டறியப்பட்டார். மரபணு பரிசோதனை வழியே குழந்தை மற்றும் தாயார் 56 நாட்களுக்கு பின்னர் ஒன்றிணைந்து உள்ளனர். இதனை உக்ரைன் நாட்டின் உள்விவகார துறையில் பணியாற்றி வரும் ஆன்டன் கெராஸ்செங்கோ என்பவர் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top