News

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்படாது: பைடன் நிர்வாகம் முடிவு

அமெரிக்க மற்றும் மெக்சிகோ இடையேயான எல்லை பகுதியானது 11-ந்தேதிக்கு பின்னர் திறக்கப்படாது என பைடன் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை அப்படியே உடனடியாக திருப்பி அனுப்பும்படி எல்லை படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

டிரம்ப் அரசில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பைடன் அரசாங்கம் வந்த பின்னர் இந்த விதிகளில் வருகிற 11-ந்தேதிக்கு பின்னர், தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்வோர் அமெரிக்காவில் நுழைய கூடிய சாத்தியம் உள்ளது. இதனால், நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இந்த விவகாரம் பைடன் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எல்லை வழியே ஏற்கனவே லத்தீன் அமெரிக்கர்கள் அலைகடல் போன்று திரண்டு வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், உள்நாட்டு பாதுகாப்பு மந்திரியான அலிஜேண்டிரோ மேயர்காஸ் டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில்லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கூறும்போது, எங்களது சட்டங்கள், தேவையாக உள்ள தனி நபர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ளன. இந்த எல்லை திறக்கப்படவில்லை. மே 11-ந்தேதிக்கு பின்னரும் திறக்கப்படாது என கூறியுள்ளார்.

நாட்டுக்குள் தகுதியான நபர்கள் வருவதற்கு பாதுகாப்பான, சட்ட வழிமுறைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தெற்கு எல்லையில் முறையற்ற வகையில் நுழைய முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

தெற்கு எல்லை வழியே கடந்த மார்ச்சில், 1.92 லட்சம் புலம்பெயர்வோரை அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என அமெரிக்க எல்லை பாதுகாப்பு துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், குடிமக்களின் பாதுகாப்பு, காவல் அதிகாரிகளின் நன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்களை முன்னிட்டு மெக்சிகோ எல்லை திறக்கப்படாது என்ற முடிவை அமெரிக்க அதிபர் பைடன் அரசு எடுத்து உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top