News

உக்ரைன் மீது ரஷியா சரமாரி குண்டுவீச்சு தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்து ஒருவர் உயிரிழந்தார்.

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 15 மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன. இதன் மூலம் உக்ரைனும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷியா வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளும் வீசப்பட்டன. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏராளமான டிரோன்களை ரஷியா பயன்படுத்தியது. அவற்றில் 20 டிரோன்களை இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைனின் தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்தது இதனால் அந்த நகரின் பல இடங்களில் டிரோனின் துண்டுகள் சிதறி கிடந்தன. மேலும் டிரோன்களை இடைமறிக்கும் சத்தம் பல இடங்களில் கேட்டது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவியது.

இந்த தாக்குதலில் உக்ரைனின் ஹோலோசிவ் நகரில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்தது. இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் கட்டிடம் தீப்பிடித்ததில் உடல் கருகி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதற்கிடையே இடைமறித்து தாக்கப்பட்ட டிரோன்கள் கீழே விழுந்ததில் பெச்செர்ஸ்கி நகரில் 3 கார்கள் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ராணுவமும் ரஷியா மீது டிரோன் தாக்குதலை நடத்தியது. ஆனால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாஸ்கோ மாகாண கவர்னர் ஆண்ட்ரே வோரோபியோவ் தெரிவித்தார். இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ஆண்ட்ரே கூறினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top