News

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்; 12 பேர் பலி

காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்.

பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையேயான நீண்டகால போரானது அவ்வப்போது தொடர்ந்து வருகிறது.

கடந்த வாரத்தில், பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் மரணம் அடைந்த நிலையில், அந்நாட்டில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டன.

எந்தவித காரணமும் இன்றி கைது செய்யப்பட்டு, இஸ்ரேல் காவலில் கைதியாக வைக்கப்பட்டார் என்பதற்காக, அட்னன் ஏறக்குறைய 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் முடிவில் அவர் உயிரிழந்து விட்டார்.

இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து கடந்த வாரம் இஸ்ரேல் மீது பாலஸ்தீனம் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது. இதனை தொடர்ந்து, இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் வான்வழியே, காசா முனை பகுதியில் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில், 12 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் (பி.ஐ.ஜே.) என்ற இயக்கம் கூறும்போது, தங்களது 3 தலைவர்களான ஜிகாத் அல்-கன்னம், கலீல் அல்-பாதினி மற்றும் டாரீக் இஜ் அல்-தீன் ஆகிய 3 பேரும், அவர்களது மனைவிகள் மற்றும் பல்வேறு குழந்தைகளும் கொல்லப்பட்டு உள்ளனர் என அறிவித்து உள்ளது.

இஸ்ரேல் தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு, காசாவை சுற்றி 40 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள இஸ்ரேல் சமூகவாசிகள் அனைவரும் புகலிடங்களில் தஞ்சமடைந்து கொள்ளும்படி அறிவுறுத்தியது. இன்று அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் 20 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர். குடியிருப்பு பகுதிகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் ராணுவம் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top