வடகொரியா தனது முதல் விண்வெளி செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்த சிறிது நேரத்திலேயே ராக்கெட்டை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் உறுதி செய்துள்ளன. இதனிடையே, ஒகினாவா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அதன் எல்லைக்குள் ராக்கெட் தாக்கும் ஆபத்து இல்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க ஜூன் 11-ம் திகதிக்குள் செயற்கைக்கோள் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதாக வடகொரியா அறிவித்திருந்தது.
இதனையடுத்து தங்களது எல்லையை அச்சுறுத்தும் எதையும் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக ஜப்பான் கூறியிருந்தது. இந்த நிலையில், தென் கொரிய தலைநகர் சியோலில் வசிப்பவர்கள் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை வான் தாக்குதல் சைரன்கள் மற்றும் வெளியேறத் தயாராகுங்கள் என்ற குறுந்தகவலுடன் கண் விழித்துள்ளனர்.
ஆனால் அந்த குறுந்தகவல் கண்டு மக்கள் பீதியடையத் தேவை இல்லை எனவும், தவறுதலாக அனுப்பட்ட குறுந்தகவல் அது எனவும் அதிகாரிகள் தரப்பு பின்னர் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, வடகொரியா அனுப்பியதாக கூறப்படும் ராக்கெட்டானது ரடாரில் இருந்து மாயமானதை சுட்டிக்காட்டியுள்ள தென் கொரியா, அது உடைந்து நொறுங்கியிருக்கலாம் அல்லது எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.