இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் (Mr. Gordon Weiss), முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசேட உரை வழங்கவுள்ளார்.
இதனை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
திரு. கோடன் வெயிஸ் இறுதிக் கட்ட ஆயுதப் போரின் போது இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஐ.நா.வின் உள்ளாய்வு அறிக்கையின்படி, போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
International Truth and Justice Project (ITJP) அமைப்பு பெப்ரவரி 2017 இல் ஐ.நாவிடம் ஒப்படைத்த அறிக்கை, தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விபரங்கள்.
மேலும், ஏப்ரல் 2013 இல் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொது நலவாய அலுவலக அறிக்கையின்படி, இலங்கையில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் விதவைகள் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் போனவர்கள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு வெளியிட்ட தரவின்படி, உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இடம்பெற்றது.
இலங்கைப் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாட்டை அமைப்பதற்காக தமிழர்கள் பெருமளவில் வாக்களித்தனர்.
இந்த நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை அரசால் நடத்தப்பட்டது.” குறித்த விடயங்களை உள்ளடக்கியதாக திரு. கோடன் வெயிஸ் அவர்களின் விசேட உரை அமையவுள்ளது.
திரு. கோடன் வெயிஸ் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு தசாப்தங்கள் சேவையாற்றினார்.
இலங்கையில் நடந்த ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் ஐ.நா. செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றினார்.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, புனைகதை அல்லாத தி கேச் (The Cage) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் நடைபெற்ற இனவழிப்பு நினைவாக இந்த நினைவேந்தல் நிகழ்வு விரிவுரைக்கு “முள்ளிவாய்க்கால்” என்று பெயரிடப்பட்டது.
இந்த விசேட உரையினை www.tgte.tv தளத்தில் நேரலையில் பார்க்க முடியும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.