News

“பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாமலாக்கப்பட வேண்டும் – உத்தேச பயங்கரவாத தடைச் சட்டதை கைவிடவேண்டும்” – ஏகமனதாக தீர்மானம்

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகம் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

இன்று 14/05/2023 அன்று காத்தான்குடி அல்மனார் மகாநாட்டு மண்டபத்தில் ஒன்று கூடிய கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளினால் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புல்மோட்டை, குச்சவெளி, திருகோணமலை நகர், கிண்ணியா, மூதூர் தோப்பூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏறாவூர்,காத்தான்குடி, சம்மாந்துறை,மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகள் மேற்படி தீர்மானங்களை காத்தான்குடியில் ஒன்றுகூடி குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியதோடு இலங்கை அரசாங்கத்திற்கு ஊடகங்கள் ஊடாக அறிவித்துள்ளனர்

மேற்படி தீர்மானங்களை அவ்வப் பிரதேச பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள், மஜ்லிசுஸ் சூரா அமைப்புகள், உலமா சபைகள் ஊடாக தனித்தனியாக அரசாங்கத்திற்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் அரசின் பிரதிபலிப்பை அவதானித்து தேவைப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சார்பாக காத்தான்குடியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் குழுவாக இயங்கி மேற்கொண்டிருந்தனர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் றவூப் A மஜீத் தலைமையில்

இரண்டு அமர்வாக நடைபெற்ற மேற்படி நிகழ்வில் காலை முதல் அமர்வில் பயங்கரவாத தடைசட்ட விவகாரங்களில் மிக நீண்டகாலமாக செயற்பட்டு வரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்டி ஹபீப், சுவஸ்திகா அருணலிங்கம் மற்றும் பரணிதா ஞானராஜா போன்றவர்களினால் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு முழுமையான விழிப்பூட்டல் நடைபெற்றது.

மதிய உணவின் பின் நடைபெற்ற கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளின் திறந்த கலந்துரையாடல் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றும் அமர்வை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN முபீன் நடத்தினார்.

அறிமுக உரையை சிரேஷ்ட சட்டத்தரணி A உவைஸ்ஸும் நன்றி உரையை IWARE அமைப்பின் தலைவி அனீசா பிர்தெளஸ்ஸும் நிகழ்த்தினர்.

பங்குபற்றுனருக்கான முதாக்கறா நிகழ்வை விரிவுரையாளர் ரிஸ்வி மஜீதி அவர்களும் நிகழ்வின் இணைப்பாளர்களாக சகோதரர் ஹமால்தீன் மற்றும் MIM மக்பூல் ஹாஜியாரும் செயற்பட்டனர்.

நிகழ்வின் ஆலோசகராக பொறியியலாளர் MM .அப்துர் ரஹ்மான் செயற்பட்டார்.

நிகழ்வை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஷ்ஷெய்க் சபீழ் நழீமி நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top