News

பாகிஸ்தான்: மத நிந்தனையில் ஈடுபட்டதாக மதபோதகர் அடித்துக்கொலை

மத நிந்தனையில் ஈடுபட்டதாக மத போதகர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் மத கடவுளை அவமதிப்பதாக கூறி வன்முறை, படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டம் சவால்ட்ஹர் கிராமத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெரிக் இ இன்சப் சார்பில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இஸ்லாமிய மத போதகர் நிகர் ஆலம் என்பவர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, நிகர் ஆலம் மத நிந்தனையில் ஈடுபட்டு மத கடவுளை அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் சிலர் நிகர் ஆலமை சரமாரியாக தாக்கினர். அப்போது நிகர் ஆலமை போலீசார் காப்பாற்றி அருகில் இருந்த கடைக்குள் பூட்டி வைத்தனர். ஆனாலும், ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் போலீசாரையும் தாக்கிவிட்டு, கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த நிகர் ஆலமை தரதரவென இழுத்து உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் நிகர் ஆலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நிகர் ஆலமை அடித்துக்கொலை செய்வதை சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top