முள்ளிவாய்க்காலில் சிங்களம் அடைந்த வெற்றி ,இராணுவ வெற்றி அல்ல அது இன அழிப்பின் வெற்றி’ என நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதம அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (18) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே ,இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”இந்த நாள் 14 ஆண்டுகளுக்கு முன்னர், 2009 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கள, இனவாதப் பூதம் தமிழீழ தேசம் மீது நடத்திய , இன அழிப்பு வெறியாட்டத்தின் நினைவு நாள்.
நாகரிக உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய பெரும் தமிழினவழிப்பின் நினைவுகளை, அறச்சீற்றத்துடன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஒன்றாய்க்கூடி நினைவுகூரும் நாள்.
நமது மக்கள் கொத்துக் கொத்தாய் சிங்களத்தின் இனவழிப்பில் கொல்லப்பட்டமை நமது தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயரை நாம் தமிழீழத் தேசிய துக்கநாளாய் நினைவுகூரும் நாள்.
சிறிலங்கா அரசு தமிழினவழிப்பின் ஊடாக நம் தேசத்தில் ஏற்படுத்திய பெருந்துயர் ஓர் ஆறாத வடுவாக தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களம் அடைந்தது யுத்தத்தை வெற்றி கொண்ட ஓர், இராணுவ வெற்றி அல்ல.