எதுவித பாகுபாடும், இரக்கமுமின்றி ஒரு குறிப்பிட்ட பரப்பிற்குள் எமது மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த வரலாற்றுத் தவறு இலங்கை அரசாங்கத்தை ஒருபோதும் விட்டு வைக்காது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளில் தமிழினத்திற்காகத் தங்களை ஆகுதியாக்கிய எந்தவொரு உயிரின் தியாகமும் வீண்போகா வண்ணம் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க ஜனநாயகப் போராளிகளாகிய நாங்கள் அனைத்து உறவுகளை மனதில் எண்ணி அறைகூவல் விடுக்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரே நாட்டுக்குள் இருக்கும் இன்னுமொரு தேசிய இனத்தின் உரிமை சார் விடுதலைப் போராட்டத்தை தன் நாட்டு இராணுவத்தின் இயலாமையின் நிமித்தம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயங்கரவாதப் போராட்டம் எனச் சித்தரித்து அந்நாடுகளின் துணையோடு வெறியாட்டம் நடத்தி மௌனிக்கச் செய்துவிட்டு அதை எண்ணி வெட்கித் தலை குனியாமல் இன்னும் இன்னும் சிங்களம் பெருமிதம் அடைந்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் உரிமை, மொழி, வாழ்விடம், அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளில் சிங்களம் கைவைக்கத் தொடங்கியதில் இருந்து தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்னிருந்த சிங்களம் சுதந்திரத்தின் பின் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்கியதன் காரணமாக இந்நாட்டில் தமிழ மக்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படத் தொடங்கின.
இவ் உரிமைகைள மீட்டெடுப்பதற்காக மூத்த தமிழ்த் தலைவர்கள் அகிம்சை ரீதியில் தங்கள் போராட்டத்தினை முன்னெடுக்க அதற்குப் பல ஏமாற்றங்கள் மாத்திரமே பரிசளிக்கப்பட்டது.
இறுதியில் இளைஞர்கள் அந்த ஏமாற்றங்களுக்கு ஆயுதத்தால் பதிலளிக்கத் தொடங்கினர். தங்கள் இன்னுயிரைத் துச்சமென நினைத்து தமிழ் மக்களின் உரிமை மீட்பு என்பதையே ஒரே இலக்காகக் கொண்டு அவர்கள் நெருப்பாறு நீந்தினர்.
அந்தப் போராட்டம் 2009 மே 18 முள்ளவாய்க்கால் மண்ணிலே மௌனிக்கப்பட வைக்கப்பட்டது. பல துரோகங்கள், ஏமாற்றங்கள், உள்நாட்டு சர்வதேச இராஜதந்திரங்கள் அனைத்தும் ஒருமிக்கச் சேர்ந்து ஒரு இனத்தின் உரிமைப் போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து அதனை மௌனிக்கச் செய்தது.
இதில் இலங்கை அரசாங்கமோ, அப்போதிருந்த தலைவர்களோ பெருமிதம் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. மாறாக ஒரே நாட்டுத் தேசிய இனத்தை இந்தளவிற்கு வன்மத்துடன் அழிப்பதற்கான ஆட்சியே இத்தனை வருட காலமாக இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றது என்பதை எண்ணி சிங்களமும், அதன் ஆட்சியாளர்களும் வெட்கப்பட வேண்டுமே தவிர பெருமை கொள்ளக் கூடாது.
இந்த நாட்டின் பூர்வகுடிகள் தமிழர்கள். சிங்களத் தலைவர்களும், ஒரு சில மதத் தலைவர்களும் என்னதான் முட்டி மோதி வரலாறுகளைத் திரிபுபடச் செய்தாலும் உண்மை என்பது எப்போதும் ஒன்றே.
தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக் குடிகள். இதனை அவர்கள் அறிந்திருந்தாலும் அரசியல் அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யாது. அத்தகு இனம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களால் ஓரங்கட்டப்பட்டமையே இந்த நாட்டின் தற்போதையை இழிநிலைக்குக் காரணம்.
ஒரு இனத்திற்கு இழைத்த பாவமும், இனத்தின் சாபமும் ஒருபோதும் நாட்டை முன்னேற்றமடையச் செய்யாது. தற்போது அபிவிருத்தியடைந்த பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த எமது நாடு இன்று இந்தளவு பொருளாதாரப் பின்னடவைக் கண்டிருப்பதற்கான முக்கிய காரணம் இந்த நாட்டின் ஆட்சியாளர்களும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக மேற்கொண்ட திட்டங்களுமே ஆகும்.
தன் வினை தன்னைச் சுடும் என்ற கருத்துப்படி தற்போது இலங்கை அரசாங்கம் செய்தவற்றிற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. குழந்தைகள், பெற்றோர்கள், முதியவர்கள் என எதுவித பாகுபாடும் இன்றி, இரக்கமுமின்றி ஒரு குறிப்பிட்ட பரப்பிற்குள் எமது மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்றுகுவித்த வரலாற்றத் தவறு இலங்கை அரசாங்கத்தை ஒருபோதும் விட்டு வைக்காது.
அத்தனை உயிர்களுக்கும் அப்போதைய ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்தாசை புரிந்தவர்களும் பதில் சொல்;லியே ஆக வேண்டும். நீதி ஒரு நாள் கண் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
இழப்புகளும், ஏமாற்றங்களும் தமிழினத்திற்கு புதிதல்ல. எத்தனை இழப்புகளைச் சந்தித்தாலும் எமது குறிக்கோள் என்றும் மாறப்போவதில்லை. ஆனாலும் எமது குறிக்கோளுக்காக இன்னுமொரு அவலம் இடம்பெறுவதற்கும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.
தற்போது போராளிகளின் ஜனநாயக வழிப் போராட்டம் ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை இலங்கையுடன் இணைந்து நிகழ்த்திய சர்வதேசத்திற்கு ஒரு கடப்பாடு என்றும் இருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை மீட்டுத் தருவதே அவர்கள் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகும். அத்துடன் இதில் இந்தியாவும் அக்கறை கொள்ள வேண்டும். தெற்காசியாவின் வல்லரசாகத் திகழும் இந்தியா தமிழ் மக்களின் உரிமை சார் போராட்டங்களுக்கு பாரிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றது.
தற்போதய ஜனநாயக வழிப் போரட்டத்திற்கும் அதன் ஒத்துழைப்பு நிச்சயம் இருக்கும் என்று நம்புகின்றோம். எனவே தமிழினத்திற்காக மடிந்த அத்தனை உறவுகளுக்காகவும், போராளிகளுக்காகவும் இன்றைய நாளில் எமது கட்சியின் சார்பில் எமது அகவணக்கத்தினைச் செலுத்துவதுடன், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
இனத்தின் விடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய எந்தவொரு உயிரின் தியாகமும் வீண்போக வண்ணம் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.
இந்த நாளில் ஜனநாயகப் போராளிகளாகிய நாங்கள் மிகவும் உளப் பூர்வமாகவும், உயிர்நீத்த, கொலை செய்யப்பட்ட அனைத்து உறவுகளையும் மனதில் எண்;ணி இந்த ஒற்றுமைக்கான அறைகூவலை விடுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.