இன்று முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நாள், இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை அநீதியை எண்ணி, நிலைநிறுத்தி, நினைகூர்வதற்கான தருணம் இது என தொழிற்கட்சியின் நிழல் வெளிவிவகார அமைச்சர் David Lammy தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பதிவிட்டுள்ள காணொளியில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அதில் மேலும், உண்மை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் போன்றவற்றிற்கான தேடல்களில், இந்த குற்றத்திற்கான நீதி முன்னகர்த்தப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகவே முள்ளிவாய்க்கால் அமைகின்றது.
ஐக்கிய இராச்சியத்திலும், உலகெங்கிலும் உள்ள சமூகங்களினதும் பங்களிப்போடு இலங்கையின் தமிழ் சமூகங்களுக்கு தேவையான அமைதியையும், அரசியல் உறுதிநிலையையும் நாம் கட்டியெழுப்ப முடியும்.
உயிர்ப்பலி கொள்ளப்பட்டோருக்கும், உயிர்தப்பியோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிட்ட வேண்டும் என்பதில் எமது தொழிற்கட்சி உறுதி பூண்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைக்கு அமைய குற்றம் இழைத்தோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதை கருத்தில் எடுத்து தமிழர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை ரீடுவிட் செய்துள்ள தொழிற்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான Keir Starmer, இன்றைய புனித நாளின் நினைவுகளோடு இந்நாடு தழுவிய ரீதியில் வாழும் தமிழ்ச் சமூகம் தன்னை ஒருநிலைப்படுத்தியிருக்கும் வேளையில் பலிகொள்ளப்பட்ட தமிழர்களுக்கும், உயிர் பிழைத்தோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிட்ட வேண்டும் என்பதில் நாம் கொண்டிருக்கும் பற்றுறுதியைத் தொழிற்கட்சி மீண்டும் உறுதி செய்வதோடு, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் பரிந்துரைக்கு அமைய பன்னாட்டு நீதி பொறிமுறையை ஏற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்தையும் வலியுறுத்துகிறோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.