முதல் முறையாக ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் வானிலேயே தாக்கி அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் அதிசக்தி வாய்ந்த கின்சல் (Kh-47) ரக ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை மேற்கத்திய வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி உக்ரைன் ராணுவம் அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மே 4ம் திகதி அதிகாலை 02:40 மணியளவில் ரஷ்ய ஏவுகணையை தலைநகர் கீவ் மீது உக்ரைன் ராணுவம் இடைமறித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்ய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் ஒற்றை பகுதி என கூறப்படும் சிதைவுகளின் புகைப்படங்களும் உக்ரைனில் இருந்து வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த நாட்டின் விமானப்படை தளபதி மைக்கோலா ஒலேஸ்சுக் வழங்கிய தகவலில், அமெரிக்காவின் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் கின்சல் ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உக்ரைன் ராணுவம் வானிலேயே இடைமறித்து வீழ்த்தியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தகைய சிறப்பான தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் ராணுவத்தால் வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் ரஷ்யாவின் கின்சல் ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணை, ஒலியை விட 10 மடங்கு வேகமாக பறந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்க கூடிய சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.