0% buffered00:00Current time00:00
News

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் தமிழர் தரப்பிற்கு ஏமாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்றைய தினம்(15.05.2023) அதிகார பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய அதிகார பகிர்வு குறித்த இந்த கலந்துரையாடலில் எந்தவிதமான தீர்க்கமான நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் எதுவும் உறுதிப்படுத்தபடாத நிலையில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பில் இருக்ககூடிய அதிகாரங்களை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தான் ஒரு அரசியல் தீர்வுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்க முடியும் என்று தமிழ் தரப்பு தொடர்ச்சியாக தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டன. பின்பு அவை இடைநிறுத்தபட்டது.

மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, இன்று அந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அதிகார பகிர்வு சம்பந்தமாக தமிழ் தரப்புகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜனாதிபதியின் சார்பில் அது தொடர்பான நிலையான செயற்பாடு தொடர்பில் எந்த உறுதிமொழியும் முன்வைக்கப்படாத நிலையில் இந்த பேச்சுவார்த்தை நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த அதிகார பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி, தான் ஒரு குழுவை அமைப்பதாகவும் அந்த குழுவில் தமிழ் தரப்பினரும் பிரதிநிதிகளாக இருப்பார்கள் எனவும் கூறியதுடன் அந்த குழுவினூடாக இந்த அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடி முற்றுமுழுதாக தீர்க்கமான அதிகார பகிர்வை நிறைவேற்ற முடியும் என்று ஜனாதிபதி கூறியதாக அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத தமிழ் தரப்பு, ஏற்கனவே யாப்பிலிருக்கும் விடயங்களை நடைமுறைப்படுத்த குழு அமைப்பது கால நீடிப்பாக இருக்குமே தவிர ஆரோக்கியமாக இருக்காது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானமும் எடுக்காமல் இந்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதைவிடுத்து நிர்வாக விடயம் சம்பந்தமான பேச்சுக்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது பிரயோசனமற்ற செயல் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,”நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆவணமொன்றை எடுத்து வந்து, சில விடயங்களை எடுத்துரைத்தார். ஜனாதிபதியிடமும் அந்த ஆவணம் இருந்தது. குறித்த ஆவணத்தில் எதிரணி வரிசையில் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பம் இட்டிருந்தார். ஏனையோர் ஆளுங்கட்சினர்.

அத்துடன், பிரதிநிதித்துவ அரசியல் அந்தஸ்த்து அற்றவர்களும் கையொப்பமிட்டுள்ளனர். இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம். இதனை மக்கள் பிரதிநிதிகளின் ஆவணமாக எடுத்துகொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டோம்.

இந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி குழுவொன்றை அமைக்கவும் முற்பட்டார். அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். அப்படியான குழுவொன்றை அமைத்தால் வெறுமனே பேச்சு நடத்தப்படுவது மட்டுமே இடம்பெறும், காத்திரமாக எதுவும் நடக்காது எனச் சுட்டிக்காட்டினோம். அதில் நாம் பங்கேற்கபோவதில்லை எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம்.

அத்துடன், உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அறிக்கைகள் உள்ளன. ஒரு வரைபுகூட உள்ளது. இதைச் செய்வதை விடுத்து, நிர்வாகம் சம்பந்தமான பேச்சுகளில் மட்டுமே ஈடுபடுவது பிரயோசனமற்றது.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கை. எனினும், இவை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top