News

இலங்கையில் கோரத்தாண்டவமாடும் டெங்கு! – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை நாட்டில் 2 ஆயிரத்து 52 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். எனினும், இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 184 ஆகும் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 10 வருட காலப்பகுதியில், பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில், தற்போது வரையில் அதிக அவதானம் மிக்க 61 சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபை – கொதடுவை பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதனால் ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுளம்புகளின் அடர்த்தியைக் கணக்கிடும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற Breteau Index மதிப்பீட்டின் படி, 5% ஆக இருக்க வேண்டிய Breteau இன்டெக்ஸ் மதிப்பு, மாவட்டத்தின் சில பகுதிகளில் 25% ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top