ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு போரில் உக்ரைனியர்களின் நேரடி பங்கேற்பு இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 61 மாணவிகளின் உயிரைக் குடித்த செஞ்சோலை படுகொலை உள்ளிட்ட, பல விமான தாக்குதல்களின் போது அத்தகைய குண்டுவீச்சு விமானங்களை உக்ரைனியர்களே செலுத்தி இருந்தனர்.
இறுதி போரின் இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களை நோக்கி எமது உயிரை காக்கும் ஒரே எண்ணத்தோடு மக்கள் திரண்டிருந்த போது அவ்விடங்களில் நடத்தப்பட்ட விமான குண்டு தாக்குதல்களிலும் உக்ரைனியர்களின் நேரடி பங்கேற்ப்பு இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரு கொடிய யுத்தத்திற்குள் நின்று அத்தனை பக்கங்களையும் அணுவணுவாக அனுபவித்தமையினால் தன்னால், உக்ரைன் – ரஷ்ய போரையும் அதன் விளைவுகளையும் இலகுவானதாக கருத முடியவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், கடந்த 3 தசாப்தங்களாக இலங்கையில் நிகழ்ந்தேறிய உள்நாட்டுப் போரினால், சர்வதேச வரலாற்றில் எங்கும் பார்த்திருக்கவோ பதிந்திருக்கவோ முடியாத ஆகப்பெரும் அவலங்களை எதிர்கொண்டு ஓர் இனமாக இழப்பின் வலி சுமந்து நிற்கும் உக்ரைன் மக்களுக்காக தாம் பரிதாபப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.