ஈழத்தமிழினம் ஒரு புதிய வடிவிலான யுத்தத்தை தற்போது எதிர்கொண்டு வருகிறது.
துப்பாக்கி குண்டுகளினாலும், விமான குண்டு வீச்சுக்களினாலும் ஈழத்தமிழினம் மீது முப்பது வருடங்களாக புரியப்பட்டு வந்த யுத்தம் தற்போது போதைப் பொருட்களின் ஊடாக தொடர்ந்து கொண்டிருப்பதை தமிழினம் புரிந்து, திகைத்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் கந்தக குண்டுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழினம் மீதான இனவழிப்பு தற்பொழுது போதைப்பொருள் வடிவத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலாச்சார பண்பாட்டு பாரம்பரியத்தில் மிக மிக உயர்ந்த விழுமியங்களை கொண்டுள்ள தமிழினத்தை போதைப்பொருள் பாவனை படு பாதாளத்தை நோக்கி இட்டுச்சென்று கொண்டிருக்கிறது.
- போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வாள் வெட்டு, பாலியல் வல்லுறவு என்று அலைந்து திரியும் தமிழ் இளைஞர்கள்,
- எந்த வித இலட்சியங்களும் அற்ற வெறும் ஜடங்களாக மாற்றப்பட்டு வருகின்ற தமிழர்கள்,
- காரணமே இல்லாமல் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொள்ளும் மாணவர்கள்,
- இனவிருத்தியற்ற மலட்டுத்தன்மை ஏற்படும் என்று நன்கு தெரிந்தும் போதைப்பொருள் பாவிக்கும் அடுத்த தலைமுறையினர்,
என இவர்கள் சமுதாயத்தில் அவல அடையாளங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இது போன்ற காட்சிகள் தமிழ் இனத்துக்கான பலவிதமான எச்சரிக்கைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.