News

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயம்: தேடுதல் பணியின் போது பயங்கர ‘ஒலி’ – சிக்னல் கிடைத்ததா?

அட்லாண்டிக் கடல் ஆழத்தில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் மாயமானது.

இங்கிலாந்தில் இருந்து 2 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 15ம் தேதி அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளானது.

பனிப்பாறை மீது மோதிய டைட்டானிக் கப்பல் இரண்டாக உடைந்து அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. உலக வரலாற்றில் மிகவும் மோசமான கப்பல் விபத்தாக பார்க்கப்படும் டைட்டானிக் விபத்தில் 1 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

விபத்து நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் 1985ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அட்லாண்டிக் கடலின் அடி ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை நீர்மூழ்கி கப்பலில் சென்று ஆய்வாளர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கின்றனர். அதேவேளை, சுற்றுலா பயணிகளும் நீர்மூழ்கி கப்பலில் சென்று டைட்டனிக் கப்பலின் சிதைந்த பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், கனடா நாட்டின் நியூபோல்ட்லேண்ட் மாகாணத்தில் இருந்து கடந்த 16ம் தேதி டைட்டன் என்ற சுற்றுலா நீர்மூழ்கி கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிட சென்றது.

இந்த சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் இங்கிலாந்து பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் (58), இங்கிலாந்து தொழிலதிபர் ஷஷாத் தாவூத் (48), அவரது மகன் சுலைமான் தாவூத் (19), பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் அதிகாரி பால் ஹெண்ட்ரி(77), ஓஷன்கேட் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஸ்டாக்டன் ரூஷ் (60) ஆகிய 5 பேர் பயணித்தனர்.

கடைசியாக கடந்த 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நியூபவுண்ட்லேண்ட் பகுதியில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் கடலில் நீர்மூழ்கி கப்பல் பயணித்தபோது ரேடார் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கிடக்கும் பகுதிக்கு அருகே சென்ற உடன் கடலின் மேல்மட்டத்தில் இருந்து செங்குத்தாக கீழே 2.30 மணி நேரம் செல்ல டைட்டன் நீர்மூழ்கி கப்பல் தன் பயணத்தை தொடங்கியது.

போலார் பிரின்ஸ் என்ற பெரிய கப்பலில் இருந்து டைட்டன் கப்பல் ஆழ்கடல் பயணத்தை தொடங்கியது. கடலின் அடி ஆழத்தில் 1.45 மணி நேரம் செங்குத்தாக டைட்டான் நீர்மூழ்கி கப்பல் சென்ற நிலையில் திடீரென டைட்டன் கப்பலின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கனடா, அமெரிக்க கடற்படையினர் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் 96 மணி நேரத்திற்கு ஆக்சிஜன் விநியோகம் உள்ள நிலையில் கப்பல் புறப்பட்டு ஏற்கனவே 66 மணி நேரம் ஆகிவிட்டது. கப்பலில் இன்னும் 30 மணி நேரம் ஆக்சிஜன் விநியோகம் எஞ்சியுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களின் நிலை என்ன? என்று இதுவரை தெரியவில்லை. இதனால், மாயமான டைட்டன் நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தேடுதல் பணியின் போது கடலின் அடி ஆழத்தில் இருந்து பயங்கர ஒலியுடன் சிக்னல் கிடைத்துள்ளது. ரிமோர்ட் மூலம் இயக்கப்பட்டு ஆழ்கடலில் ஆய்வுகளை மேற்கொள்ளும் சோனார் கருவி இந்த தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த கருவி ஆழ்கடலில் நீர்மூழ்கி கப்பல் மாயமான பகுதியில் பயங்கர ஒலியுடன் வித்தியாசமான சிக்னல் வருவதை கனடா விமானப்படையின் தேடுதல் விமானத்திற்கு பகிர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த தகவல் உடனடியாக அமெரிக்க கடற்படைக்கு பகிரப்பட்டுள்ளது.

கடலின் அடியாழத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மாயமான பகுதியில் 30 நிமிட இடைவெளியில் பயங்கர சத்தத்துடன் சிக்னல் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிக்னல் நீர்மூழ்கி கப்பலில் இருந்து தான் வருகிறதா? என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனாலும், 30 நிமிட இடைவெளியில் பயங்கர சத்தம் கேட்பதால் அது நீர்மூழ்கி கப்பலில் இருந்து தான் வரும் சிக்னல் சத்தமாக இருக்கலாம் என்று தேடுதல் குழுவினர் கருதுகின்றனர்.

இதனை தொடர்ந்து 30 நிமிட இடைவெளியில் விட்டு விட்டு வரும் அந்த பயங்கர ஒலியின் எந்த பகுதியில் இருந்து வருகிறது என்பதை ஆராய்ந்து அப்பகுதியில் தேடுதல் பணியை அமெரிக்கா, கனடா கடற்படையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top