பிரித்தானியாவில் மருத்துவமனை அருகே உள்ள நடைபாதையில் நடந்த சென்ற பொதுமக்கள் மீது கார் மோதியதில் குழந்தை ஒன்று பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.
பிரித்தானியாவில் பெம்ப்ரோக்ஷையரின்(Pembrokeshire) ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட்(Haverfordwest) பகுதியில் உள்ள Withybush மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 11.50 மணியளவில் நடந்த இந்த விபத்தில் குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக 100 கி மீ தொலைவில் உள்ள கார்டிஃப் மருத்துவமனைக்கு குழந்தை ஏர் ஆம்புலன்ஸ் உதவி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதே சமயம் குழந்தையின் பெற்றோர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், சிறப்பு அதிகாரிகளால் ஆதரவு அளிக்கப்பட்டு வருவதாக Dyfed-Powys பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அத்துடன் நடைபாதையில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மற்றும் விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த பயணி ஒருவர் என இருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் விபத்து குறித்து பொலிஸார் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தி வந்தனர், அத்துடன் விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.