பெரும் திரளான புலம்பெயர் மக்கள் வெஸ்ட்மின்ஸ்டரில் இரண்டு இரவுகள் தெருவில் விடப்பட்டது தொடர்பில் உள்விவகார செயலர் விளக்கமளிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உள்விவகார செயலர் சுவெல்லா பிரேவர்மேனுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் சிட்டி கவுன்சில் தலைவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் இந்த விவகாரம் தொடர்பில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புதன் இரவு சுமார் 40 அகதிகள் பொருத்தமான தங்குமிடமின்றி பெருநகருக்குள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், உள்ளூர் அதிகாரிகளிடம் கூட முறையான தகவல் பரிமாற்றம் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஹொட்டல் ஒன்றில் அந்த புலம்பெயர் மக்களை தங்க வைக்க உள்விவகார அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பகல் சுமார் 20 புலம்பெயர் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல் தொடர்பில் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த குழுவினர் சிறிது நேரம் பெல்கிரேவ் சாலையின் நடுவில் நின்று போக்குவரத்தை இடையூறு செய்த நிலையில், மாநகர பொலிசார் அவர்களை நடைபாதைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்மேல், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஹொட்டலுக்குள் சென்று உள்விவகார அலுவலகத்தின் பிரதிநிதியுடன் பேசியுள்ளனர். புலம்பெயர் மக்கள் தெருவில் விடப்பட்ட சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ள கவுன்சில் தலைவர் Adam Hug, இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பல இரவுகள் அவர்களை தெருவில் விடுவது ஒரு மாற்று ஏற்பாடு அல்ல எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே உள்விவகார அலுவலக செய்தித்திடர்பாளர் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டிய போதிலும், நாங்கள் தொடர்ந்து தங்குமிடங்களை வழங்குகிறோம். நாளுக்கு 6 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசாங்கம் செலவிடுகிறது. மேலும் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே, உதவிகள் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.