News

புதிய சிக்கலில் ரஷியா…! நாட்டுக்கு எதிராக திரும்பிய ராணுவக் குழு ! புதின் கடும் எச்சரிக்கை !!

‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது

ரஷியா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷியாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இது ரஷியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறது.

சமீபகாலமாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீதும், வாக்னர் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த வாக்னர் அமைப்பு தற்போது ரஷியாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

இது தொடர்பாக யெவ்ஜெனி பிரிகோஸ் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “நாங்கள் 25 ஆயிரம் பேர் இருக்கிறோம், நாங்கள் சாவதற்கு கூட தயாராக உள்ளோம், ரஷியாவை கட்டாயம் வீழ்த்துவோம், ஏற்கனவே நாங்கள் பல பகுதிகளை கைப்பற்றி உள்ளோம், தங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார், மேலும் தங்களுடன் இணைந்து ரஷியா மக்களும் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கோபமடைந்த ரஷியா, கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது.

ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் புதின், “வாக்னர் அமைப்பின் இந்த செயல் மிகப்பெரிய தேசத்துரோகம், உள்நாட்டு துரோகம் உட்பட எந்த அச்சுறுத்தல்களிலிருந்தும் எங்கள் மக்களையும் நமது நாட்டையும் பாதுகாப்போம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷியா அதிபர் புதின் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் படை ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது சொந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பு நாட்டுக்கு எதிராக திரும்பி இருப்பது ரஷியாவிற்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top