News

மெக்சிகோவில் ஆயுதம் ஏந்திய கும்பலால் 14 போலீஸ்காரர்கள் கடத்தல்

 பெண் போலீசை விடுவித்து விட்டு மீதம் இருந்த 14 போலீஸ்காரர்களை வண்டிகளில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

மெக்சிகோவின் சியாபாசின் மாகாணத்தில் போலீஸ்காரர்களை ஏற்றிக்கொண்டு அரசு வாகனம் ஒன்று ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு சென்று கொண்டிருந்தது.

நெடுஞ்சாலையில் சியாபாஸ் பகுதி அருகே அந்த வாகனம் சென்றபோது 2 வெள்ளை நிற வாகனங்கள் போலீசார் சென்ற வாகனத்தை வழிமறித்தன.

மறித்த வாகனங்களில் இருந்து கையில் நவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முகத்தை மூடியவாறு மர்ம கும்பல் ஒன்று இறங்கியது. அவர்கள் போலீசாரின் வாகனத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் ஆயுதங்களை காட்டி போலீசாரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்படி மிரட்டினர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி மர்ம கும்பல் பறிமுதல் செய்தது.

கூட்டத்தில் இருந்த பெண் போலீசை விடுவித்து விட்டு மீதம் இருந்த 14 போலீஸ்காரர்களை வலுகட்டாயமாக தங்கள் வண்டிகளில் ஏற்றி சிறை பிடித்து கடத்தி சென்றனர்.

இதுகுறித்தான வீடியோ காட்சிகளும் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த போலீசார், கடத்தி செல்லப்பட்ட 14 போலீஸ்காரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top