News

ரணிலின் லண்டன் செவ்விக்கு எதிராகத் தமிழ்த் தலைவர்கள் கண்டனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை, அவர் பச்சைப் பொய்யுரைக்கின்றார் என்று தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் கனடாவின் முன்னாள் பிரதமரும் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஸ்ரீபன் ஹூப்பருக்கு வழங்கிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

ரணிலுடன் பேச்சுக்குச் சென்ற சம்பந்தன் அவர் ஏமாற்றியதாகச் சொன்னார். ஆனால், ரணில் அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பது இலண்டன் பேச்சில் தெரிகின்றது.

காணிப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக வீரவசனம் பேசியிருக்கின்றார். ஆனால், இங்கே குருந்தூர், திரியாய என்று புதிதாக காணிப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வெறும் கண்துடைப்பே. ஜூலைக்கு முன்னர் தீர்வு வழங்குவது நல்ல விடயம். ஆனால், அதற்குரிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் புளொட் அமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் விடயத்தில் மாத்திரம் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காணி விவகாரத்தில் தொல்பொருள் திணைக்களம் ஊடாகப் புதிதாக பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

அரசியல் தீர்வு தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை. முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசவில்லை.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேசினாலும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளாலேயே நிராகரிக்கப்பட்டதொன்று என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் ரெலோ அமைப்பின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் இருக்கின்றது.

மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். காணி விடுவிப்பில் எதுவும் நடக்கவில்லை.

ரணிலுடன் நடந்த பேச்சுக்களில் எந்தப் பிரயோசனமும் இல்லை. சர்வதேச சமூகத்தை ஈர்ப்பதற்காக லண்டனில் அவர் பொய்யுரைத்துள்ளார் என்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில்,

காலக்கெடுக்களைக் கூறி தீர்வு வரும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அவர் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்றார்.

இலங்கையிலுள்ள தலைவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மாட்டார்கள். காணிகளை விடுவிப்பதாகச் சொல்கின்றார்கள்.

ஆனால், காணிகளை விடுவிப்பதற்கான எந்தவொரு ஆயத்தங்களையும் காணவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பணியம் தோல்வியடைந்து அடுத்த ஏமாற்றுக்காக உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்க முயல்வதாகக் கூறுகின்றார்கள்.

சர்வதேச சமூகம் இலங்கைத் தலைவர்கள் சொல்வதை நம்பக்கூடாது. உண்மையை நேரில் வந்து அறிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதி ரணிலின் கருத்தைக் கண்டிக்கின்றேன் என்றார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் பௌத்த – சிங்கள மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவற்றை மூடி மறைப்பதற்கு தமிழ் மக்கள் தன்னுடன் உள்ளார்கள் என்று காண்பிப்பதற்கு தமிழ்ப் பிரதிநிகளுடன் பேச்சு நாடகத்தை நடத்துகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

அதை சர்வதேச சமூகத்தின் முன்பாக வைத்து தன்னை அவர் நியாயப்படுத்துகின்றார். ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வார் என்பதில் ஆச்சரியமில்லை.

அவர் கூறும் பொய்யை உண்மையாக்குவதற்கு எமது தாயகத்திலுள்ள தமிழ்த் தரப்புக்கள் தொடர்ந்து அவருக்கு முட்டுக்கொடுக்கின்றன என்பதுதான் துரதிஷ்டவசமானது. காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தை அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்தப் பணியகத்தின் வெற்றிடங்களைக்கூட பூர்த்தி செய்வதற்கு இவர்களுக்கு விருப்பமில்லை. தமிழ் மக்கள் ரணிலுக்கு எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில் சர்வதேச சமூகத்தின் முன்பாக அப்பட்டமாக அவர் பொய்யுரைத்துரைக்கின்றார் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top