News

ரஷியாவில் முடிவுக்கு வந்தது ‘திடீர் புரட்சி’ : வாக்னர் குழு தலைவர் நாட்டைவிட்டு வெளியேறினார்

ரஷிய அரசுடன் கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்துகொண்ட நிலையில், வாக்னர் குழு தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

உக்ரைன் மீதான போரில் ரஷியாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வருகிறது. பாக்மத் நகரை கைப்பற்றியது உள்ளிட்ட சண்டைகளில் இப்படை முக்கிய பங்காற்றியது.

கூலிப்படையின் குற்றச்சாட்டு இந்த கூலிப்படை திடீர் திருப்பமாக ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும், தங்கள் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டது என்றும் குற்றம்சாட்டியது.

குறிப்பாக ரஷிய பாதுகாப்பு மந்திரி ஷெர்ஜி ஷோய்குவை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் கடுமையாக விமர்சித்தார். கொந்தளித்த ரஷிய அதிபர் ரஷிய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானுக்குள் தடையின்றி நுழைந்த வாக்னர் படையை, அங்கிருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறுமாறு பிரிகோசின் உத்தரவிட்டார்.

தனியார் படையின் இந்த செயல், ரஷிய அரசுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. ‘இது மிகப் பெரிய துரோகம்’ என்று கொந்தளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கிளர்ச்சியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

நெடுஞ்சாலைகள் துண்டிப்பு ரஷிய படைகள் மீது வாக்னர் குழுவும், அவர்கள் மீது ரஷிய வீரர்களும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறிய தனியார் படையை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலைகளை ஆங்காங்கே ரஷிய ராணுவத்தினர் துண்டித்தனர். ஆனாலும் மாஸ்கோவுக்கு 200 கி.மீ. அருகில் கிளர்ச்சியாளர்கள் நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது. அதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்குள்ள பிரசித்தி பெற்ற செஞ்சதுக்கம் அருகிலும் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

பெலாரஸ் முயற்சியில் சமரசம் இந்நிலையில் ரஷியாவுக்கு எதிரான வாக்னர் குழுவின் ‘திடீர் புரட்சி’ உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டது. ரஷியா கேட்டுக்கொண்டதன் பேரில், அதன் நட்பு நாடான பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து பிரிகோசின் தனது வீரர்களை மீண்டும் உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளார். அங்கு அவர்கள் மறுபடியும் ரஷிய ராணுவத்துடன் இணைந்து உக்ரைன் வீரர்களுக்கு எதிராக சண்டையிடுவார்கள்.அதேநேரம், தனியார் படை தலைவர் பிரிகோசின் பெலாரஸ் நாட்டுக்குச் செல்வார். அவருக்கு எதிரான ஆயுத கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார். அதேபோல, கிளர்ச்சியில் இறங்கிய தனியார் படை வீரர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதேவேளையில் கிளர்ச்சியில் ஈடுபடாத தனியார் வீரர்கள் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் இருந்து வெளியேறிய வாக்னர் குழு வீரர்களை உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு காரில் வந்த தனியார் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோசினுடன் சிலர் கைகுலுக்குவதும் தெரிகிறது. தனியார் படையினர் முழுவதும் அந்நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக பிராந்திய கவர்னர் பின்னர் அறிவித்தார்.

ரத்த சேதம் தவிர்ப்பு தனியார் படை உடனான சமரசத்தால் ரஷியாவில் பெரும் ரத்த சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தலைமைக்கு ஏற்பட்ட புதிய தலைவலி நீங்கியுள்ளதாகவும் கருதப்படுகிறது. ஆனால் இந்த விவகாரம், ரஷிய பாதுகாப்பு அமைப்பில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் எதிரணி நாடுகள் விமர்சித்துள்ளன. தொடர்ந்து தனியார் படை, ரஷிய ராணுவத்துடன் இணக்கத்துடன் செயல்படுமா, அதன் தலைவர் பிரிகோசின் பெலாரசில் இருந்தபடி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top