வாக்னர் படை குழு தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
உக்ரைன் போரில் கூலிப்படையாக ரஷ்யா சார்பில் களமிறக்கப்பட்ட வாக்னர் படைகள் மீது ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி தாக்குவதாகவும், வீரர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதாகவும் அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் வாக்னர் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மீது நடவடிக்கை எடுக்க தனது துருப்புகள் மாஸ்கோவிற்கு நகரும் என்று எச்சரித்து இருந்தார்.
அத்துடன் இது ரஷ்யாவிற்கு எதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்ல, மாறாக நீதிக்கான அணிவகுப்பு என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
ரஷ்யா சார்பாக உக்ரைனில் சண்டையிட்ட படைகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அடுத்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முழுவதும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
தலைநகர் மாஸ்கோவின் சாலைகள் மூடப்பட்டு, உயர் அதிகாரிகளின் மற்றும் அரசின் முக்கிய கட்டிடங்கள் ஆகியவற்றுக்கு ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இதற்காக ரஷ்ய நாடாளுமன்றமான டூமாவிற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் அனைத்திற்கும் ராணுவ ஆயுத வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வாக்னர் படையின் தலைவர் பிரிகோஜினின் முக்கிய ஊடகம் வழங்கிய தகவலின் அடிப்படையில், வாக்னர் கூலிப்படையினர் Rostov பகுதியை நோக்கி அணிவகுத்து செல்வதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதமேந்திய கலகத்தை தூண்டியதற்காக வாக்னர் படை குழு தலைவர் மீது ரஷ்யா கிரிமினல் வழக்கை அறிவித்துள்ளது.
அத்துடன் பிரிகோஜினின் வேண்டுகோளின் பேரில் வாக்னர் வீரர்கள் யாரும் ரஷ்யாவிற்கு எதிரான குற்ற நடைமுறை மற்றும் துரோக உத்தரவுகளை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டாஸ் ஏஜென்ஸின் தகவல் படி, தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி புடினுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.