இத்தாலியின் கலாப்ரியா கடற்பகுதியில் படகு விபத்தில் சிக்கி டசின் கணக்கான புலம்பெயர் மக்கள் மரணமடைந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக மூன்று இத்தாலிய எல்லை பொலிஸ் அதிகாரிகள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூவர் மீதும் படுகொலை தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 180 புலம்பெயர் மக்களுடன் புறப்பட்ட படகு ஒன்று பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 94 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பச்சிளம் குழந்தை மற்றும் சிறார்கள் உட்பட பலர் இறந்த விவகாரம் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. உடைந்த படகின் எஞ்சிய பாகங்கள் கலாப்ரியா கடற்பகுதியில் ஒதுங்கியது.
விபத்து நடப்பதற்கும் சில நிமிடங்கள் முன்பு, தொடர்புடைய படகினை எதிர்கொள்ளும் பொருட்டு, இத்தாலிய எல்லை பொலிசார் குழு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது.
சம்பவத்தன்று, ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி 10.35 மணியளவில் தொடர்புடைய படகினை அடையாளம் கண்டு, இத்தாலிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இத்தாலிய அதிகாரிகள் இரண்டு ரோந்து படகுகளை அந்த புலம்பெயர் மக்களின் படகை எதிர்கொள்ள அனுப்பியுள்ளனர். ஆனால் 4 மணியளவில் மோசமான வானிலையை குறிப்பிட்டு, தேடுதல் நடவடிக்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில், புலம்பெயர் மக்களின் படகு விபத்தில் சிக்கி உடைந்துள்ளது.
இதில், ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துருக்கி வழியாக இத்தாலியை நெருங்கிய புலம்பெயர் மக்கள் பலர் மரணமடைந்தனர். இவர்களின் சடலங்கள் அடுத்த சில நாட்களுக்கு கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது.
சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்தும், பலரது சடலம் இன்னமும் மீட்கபடவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தில் இத்தாலிய பொலிசார் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது