பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்ரோஷமான நபர் ஒருவர் சுத்தியல் கோடாரியை கையில் ஏந்திக் கொண்டு இரண்டு பேரை கொலைவெறி தாக்குதலுடன் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடகிழக்கு லண்டன் பகுதியில் அமைந்துள்ள மத்திய மிடில்செக்ஸ் மருத்துவமனையில் ஆக்ரோஷமான மனிதர் ஒருவர் கையில் சுத்தியல் கோடாரியுடன் இரண்டு பேரை துரத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் துரத்தப்பட்ட நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்து இல்லாத காயத்தினை அடைந்து இருப்பதாகவும் மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை மதியம் 1.20 மணியளவில் மத்திய மிடில்செக்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த அவசர அழைப்புக்கு பதிலளித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆயுதமேந்திய மெட் பொலிஸார் தாக்குதல்தாரி-யை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் சுத்தியல் கோடாரியுடன் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு காயங்கள் ஏற்பட்டு இருந்ததால், அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தாக்குதல்தாரி-க்கு ஏற்பட்டுள்ள காயங்கள் சுயமாக ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த தாக்குதலுக்கு பின்பு எத்தகைய தீவிரவாத தூண்டுதல்களும் இல்லை என்றும் பொலிஸார் விளக்கியுள்ளனர்.
மருத்துவமனை ஏற்பட்ட இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸார் மருத்துவமனைக்குள் வைத்து பூட்டினர்.
பிறகு வன்முறையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையை மீண்டும் பொலிஸார் திறந்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை நடத்தி வரும் லண்டன் நார்த் வெஸ்ட் யுனிவர்சிட்டி ஹெல்த்கேர் NHS டிரஸ்ட் வழங்கியுள்ள தகவலில், மருத்துவமனை மாலை 4 மணிக்கு திறக்கப்பட்ட பிறகு சேவைகள் மீண்டும் வழக்கம் போல் தொடரும் என தெரிவித்துள்ளது.