இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் ஆபத்தான சூழ்நிலையில் தாம் பொய்யாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மூன்று பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்கள் மீது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2021, ஒக்டோபரில் கனடாவுக்கு செல்ல முயன்றபோது, தமது படகு பழுதாகிய காரணத்தால் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியா தீவில் அடைக்கலம் பெற்றனர். இதன் பின்னர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அவர்கள் அங்கு தடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்த காலப்பகுதியில் அங்கு பாலியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலர் தங்களைத் தாங்களே காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மொத்தத்தில், 89 புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர் இதில் சிலர் இலங்கைக்குத் திரும்புவதற்கான கட்டணங்களை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் பிரெஞ்சு தீவான ரீயூனியனுக்கு சென்றனர்.
இதன்போது, புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்த பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இருவருக்கு மட்டும் “மூன்றாவது நாட்டில்” புகலிடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 20 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனமான லீ டே, பிரித்தானிய பாதுகாப்பு, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர்கள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஆணையாளர் போல் கேண்ட்லர் ஆகியோருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்குப் போதிய பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை வழங்கத் தவறியதன் மூலமும், மூன்றாம் தரப்பினரிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியதன் மூலமும் அரசாங்கம் தனது கடமையில் தவறிவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.