உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான நட்டஈட்டுத் தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென அரச திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பிரதிவாதிகளுக்கும் உச்ச நீதிமன்றம் விதித்த மொத்த அபராதத் தொகை 310 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சிசிரவுக்கு 10 மில்லியன் ரூபாவும் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ஜனவரி 12 ஆம் திகதி ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொண்டதுடன், உரிய இழப்பீட்டை ஆறு மாதங்களுக்குள் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்த போதே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
அதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டை தனது சொந்த நிதியில் இருந்து செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்ற தீர்ப்பில் உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.