பிரான்ஸில் நஹேல் எனும் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாகப் பெரும் கலவரமாக வெடித்துள்ளதுடன்,சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாரிஸின் புறநகர்ப்பகுதியில் கடந்த செவ்வாயன்று போக்குவரத்து வாகனச் சோதனையின்போது, நஹேல் (Nahel) எனும் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதனை கண்டித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதன் காரணமாக 45,000 பொலிஸார் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 2000 கலவரக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் நெயில் எம்(Nael m) உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.
நாண்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மசூதியில் உடல் வைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட்ட பின்னர் அதே பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலவரம் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கம் 45,000 பொலிஸாரையும் பல கவச வாகனங்களையும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள அமைதியின்மையால் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீவைக்கப்பட்டு கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.
அத்துடன் 12 வணிக வளாகங்கள், 250 புகையிலை கடைகள் மற்றும் 250 வங்கி கிளைகளும் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கலவர அலைகள் உருவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.