News

பிரான்சில் மேயர் வீடு மீது காரை கொண்டு மோதி, தீ வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்; மனைவி, குழந்தை காயம்

பிரான்சில் மேயர் வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் காரை கொண்டு மோதி, தீ வைத்ததில் மனைவி, குழந்தை காயம் அடைந்து உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆப்பிரிக்க சிறுவன், கடந்த 5 நாட்களுக்கு முன் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நிற்காமல் விதிமீறி சென்று விட்டான் என கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான்.

இதுபற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அரசுக்கு எதிராக பாரீஸ் உள்பட எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியதில், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மனின் அவரது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

பாரீசில் வன்முறை பரவியதில், 40-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகி உள்ளன. அத்துடன் 12 வணிக வளாகங்கள், 250 புகையிலை கடைகள் மற்றும் 250 வங்கி கிளைகளும் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், 170 காவல் துறை அதிகாரிகள் காயம் அடைந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் பாரீசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவர் அவரது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அவரது வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடந்து உள்ளது.

அவருடய வீடு மீது அந்த கும்பல் கார் ஒன்றை கொண்டு மோத செய்து உள்ளது. அதன்பின்னரும் ஆத்திரம் தீராமல், வீட்டில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தி உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒன்று காயமடைந்து உள்ளனர். இது பேசி விவரிக்க முடியாத ஒரு கோழைத்தன கொலை முயற்சி என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top