ரஷ்ய ராணுவ தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படை, கடைசி கட்டத்தில் திட்டத்தை கைவிட, தற்போது அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
வாக்னர் கூலிப்படை முன்னெடுத்த ஆயுத கிளர்ச்சியானது, 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் விளாடிமிர் புடினின் செல்வாக்கிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது.
மேலும், எதிர்பாராத இந்த நெருக்கடி, ரஷ்யாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டதை அடுத்து பிரிகோஜின் மற்றும் வாக்னர் கூலிப்படையினர் விசாரணை மற்றும் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேலும், வாக்னர் கூலிப்படையின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை தங்கள் நாடு பயன்படுத்திக்கொள்ளும் எனவும் பெலாரஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் எல்லையில் இருந்து 142 மைல்கள் தொலைவில், கைவிடப்பட்ட ராணூவ முகாமை வாக்னர் கூலிப்படையினர் பயன்பாட்டுக்கு என பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்துள்ளது.
உக்ரைன் எல்லைப்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், 8,000 வீரர்கள் வரையில் வாக்னர் கூலிப்படை திரட்டியுள்ளதாகவும், இவர்கள் உக்ரைனுக்கு ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து, உக்ரைன் தரப்பில் இருந்து பெலாரஸ் எல்லையில் ராணுவத்தை குவித்துள்ளனர். முன்னதாக பெலாரஸ் நாட்டில் இருந்து ஆயுதம் மற்றும் ராணுவத்தினரை உக்ரைனுக்குள் அனுப்பி வைக்க ரஷ்ய ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மட்டுமின்றி, பெலாரஸ் நாட்டில் ரஷ்ய ராணுவம் முகாமிடுவதற்கும் அங்குள்ள ஜனாதிபதி அனுமதித்திருந்தார். ரஷ்யாவின் அணு ஆயுதங்களும் பெலாரஸ் நாட்டில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.